Tuesday, September 7, 2010

உதவி

பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஒருநாள் அவனுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. "புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தால் வளமாகவும், பெருமையாகவும் வாழலாம்!' என்று நினைத்தான் அவன்.
நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்காக நல்ல உடைகளை அணிந்து கொண்டான். நேரத்தோடு செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தான் ரஞ்சித். வழியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்மணி ஒருத்தி அதன் சக்கரத்தைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற யாரும் அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
இதைப் பார்த்த அவன், "யாராவது உதவி செய்தால்தான் அவளால் சக்கரத்தைக் கழற்றி மாட்ட முடியும். நான் உதவி செய்தால் நேரத்தோடு நேர்முகத் தேர்விற்குச் செல்ல முடியாது, அத்துடன் நான் அணிந்திருக்கும் உடைகள் வேறு அழுக்காகி விடும். என்ன செய்வது?' என்று குழம்பினான்.
கண் எதிரே ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தும் உதவி செய்யாமல் செல்வதா? என்ன நடந்தாலும் நடக்கட்டும். அவளுக்கு உதவி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
காரின் அருகே சென்ற அவன், ""அம்மா! நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்!'' என்றான். பிறகு இருவரும் பழுதான சக்கரத்தைக் கழட்டி வேறு சக்கரத்தை மாட்டினர். ""மிகவும் நன்றி!'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள் அவள். அங்கிருந்து காரில் புறப்பட்டாள். காலதாமதமாகி விட்டது. வேலை கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று நினைத்தபடி அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தான் அவன்.
இயக்குநர் அறையில் இருந்த பெண்மணி அவனைப் பார்த்ததும் வெளியே வந்தாள். தான் உதவி செய்த பெண்மணிதான் அவள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவனை வரவேற்ற அவள், ""நான் இந்த நிறுவனத்தின் இயக்குநர். பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இங்கே வேலை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாளையே நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்!'' என்றாள்.
ஒருநிமிடம் அசந்து போனான் ரஞ்சித். ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவி செய்ததால், அந்த ஆண்டவன் இவ்வளவு பெரிய நண்மையை தனக்கு தந்ததை எண்ணி மகிழ்ந்தான்.
***


:ty: தினமலர்

4 comments:

  1. உதவி செய்தவன் பன்மடங்கு அதிகமாக நிச்சயம் பெறுவான்!!

    ReplyDelete
  2. ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியை அவர்களுக்கு, வணக்கம். தங்களின் மழலையர் வலைப் பதிவு மிக அருமையாக உள்ளது. தங்களின் சில பதிவுகளை மலேசிய நண்பன் `மாணவர் சோலை'யில் இடம் பெறச் செய்யலாம் என்று கருதுகிறேன். தங்களின் அனுமதி தேவை. தங்களின் சேவை மேலும் வளர
    என்னுடைய ஆசிகள். வாழ்க வளமுடன்.
    மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

    ReplyDelete
  4. அருமையான படைப்பு...!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
    என்றும் அன்புடன்
    கா.வீரா
    www.kavithaipoonka.blogspot.com

    ReplyDelete